வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 2ம் நிலை பெண் காவலர் தேர்வில் 700 பேர் பங்கேற்பு ஐஜி, டிஐஜி, எஸ்பி நேரில் ஆய்வு

வேலூர், நவ.20:வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 2ம் நிலை பெண் காவலர்களுக்கான தகுதி தேர்வில் 700 பேர் பங்கேற்றனர். இதனை ஐஜி, டிஐஜி, எஸ்பி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடந்த 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வில் 46 ஆயிரத்து 700 பேர் தேர்ச்சி பெற்றனர். வேலூர் மாவட்டத்தில் 3,688 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,334 பேர் என மொத்தம் 5,022 பேர் தேர்ச்சி பெற்றனர். முதற்கட்டமாக 2ம் நிலை ஆண் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.இந்நிலையில் தொடர்ச்சியாக 2ம் நிலை பெண் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை 6 மணியளவில் தொடங்கியது. உடற்தகுதி தேர்வில் பங்கேற்க வந்த பெண்கள் அதிகாலை 5.30 மணியளவில் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அசல் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடந்தது.

இதையடுத்து, உயரம் சரிபார்க்கப்பட்டு 400 மீட்டர் ஓட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஐஜி சாரங்கன், டிஐஜி காமினி, எஸ்பி விஜயகுமார்(பொறுப்பு) ஆகியோர் காவலர் தேர்வுப் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். காவலர் தேர்வில் முறைகேடுகள் ஏற்படுவதை தடுக்க வீடியோ பதிவுகள் எடுக்கப்பட்டது. இதில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 700 பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 2ம் நிலை பெண் காவலர்களுக்கான முதற்கட்ட தேர்வு நேற்று தொடங்கி இன்றுவுடன் முடிவடைகிறது. முதற்கட்ட கட்ட தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு பின்னர் 100 மீட்டர், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகியவற்றில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். நாளை ஆண்களுக்கான இரண்டாம் கட்ட காவலர் தேர்வு நடைபெறும் என்றனர்.

Related Stories: