வடலூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

நெய்வேலி, நவ. 19: குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்குள்ள பல்வேறு நகர் பகுதியில் சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த  நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு வந்து கருங்குழி  கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே இங்குள்ள அரசு அதிகாரிகள் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் வடலூர் பகுதியில் தேங்கும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் தினமும் அகற்றி வந்தாலும், கழிவுநீர் அடைப்பு மற்றும் பூச்சி மருந்து தெளிப்பது உள்ளிட்ட பணிகள் மந்த நிலைதான் நடந்து வருகிறது. பல வாய்க்கால்களில் சிலாப்புகள் பெயர்ந்து  குப்பைகள் தேங்கி உள்ளதால் கொசு உற்பத்தி தாராளமாக பரவும் நிலை உள்ளது. இதனால் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல் வடலூர் பகுதியில் வேகமாக பரவும் நிலை உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், சிலர் உயிர் பயத்தில் மேல் சிகிச்சைக்காக கடலூர், விருத்தாசலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: