பள்ளி மாணவிகள் 2பேர் தற்கொலை

சேலம், நவ.13: சேலத்தில் பள்ளி மாணவிகள் 2 பேர், தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் சேலத்தில் உள்ள பிரபல ஓட்டலில் சூப்பர்வைசரசாக உள்ளார். இவரது மனைவி அமுதா, தனியார் நிறுவனத்தில் பணியில் உள்ளார். இவர்களுக்கு 3 மகள், ஒரு மகன் இருந்தனர். இதில், 2வது மகள் சவுமியா (14), கொண்டலாம்பட்டி அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவந்தவர், இரவு 7 மணியளவில் வீட்டின் மாடி அறைக்கு சென்றுள்ளார். சிறிதுநேரத்தில் சவுமியா அலறித்துடிக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து, அவரது சித்தி லட்சுமி என்பவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக்கொண்டு சவுமியா, உடல் கருகி கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சவுமியாவை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கொண்டலாம்பட்டி போலீசார், மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து, பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர். சேலத்தை அடுத்த சுக்கம்பட்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மலர். இவர்களுக்கு கவிப்பிரியா (16) என்ற மகளும் உள்ளார். இவர், சுக்கம்பட்டியில் உள்ள அரசுப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கினார். நேற்று காலை கவிப்பிரியா தனது துப்பட்டாவால் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து வீராணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி  பிரதே பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி கவிப்பிரியாவின் தற்கொலை குறித்து போலீசார் மாணவியின் பெற்றோர், உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>