ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் சிறப்பு வழிபாடு

வாழப்பாடி, நவ.13: ஐப்பசி பவுர்ணமியையொட்டி, சிவாலயங்களில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். ஐப்பசி பவுர்ணமியையொட்டி, சேலம் மாவட்டம் பேளூரில் உள்ள பிரசித்தி பெற்ற தான்தோன்றீசுவரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து பூஜை செய்தனர். இதில், பேளூர், வாழப்பாடி, புழுதிக்குட்டை, கருமந்துறை மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். வாழப்பாடி பேரூராட்சி ரயில் நிலையம் அருகே தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில், மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்து சிறப்பு நடைபெற்றது. வாழப்பாடி, புதுப்பாளையம், அய்யா கவுண்டர் தெரு, வைத்திய படையாச்சி தெரு உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

ஆத்தூர்: ஆத்தூர் தாயுமானவர் தெருவில் உள்ள அனுமன் கோயில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இக்கோயிலில் ஐப்பசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி, அனுமனுக்கு அன்னகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஆத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த கல்லாநத்தம், வடக்கு காடு, முல்லைவாடி உள்ளிட்ட பகுதியைச்சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இடைப்பாடி: இடைப்பாடியில் உள்ள பிரசன்ன நஞ்சுண்டேசுவரர் கோயிலில் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு படையலி–்ட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில், இடைப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல், இடைப்பாடி அருகே வெள்ளநாயக்கன்பாளையத்தில் உள்ள வேதநாயகி அம்மன் உடணுறை பசுபதீசுவரர் கோயிலில் அரிசி சாதத்தால் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி அருகே சென்னகிரி கிராமம் வட்டமலை நகரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. சுவாமிக்கு அன்னாபிஷேகத்தை தொடர்ந்து அன்னம் மற்றும் பல விதமான காய்கறிகளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அன்ன பூஜை மற்றும் சிவனடியார்கள் கலந்துகொண்டு தேவாரத் திருமுறைகள் பாடப்பட்டு சிறப்பு மஹா தீபாரதனை நடைபெற்றது. விழாவிற்கு வட்டமலை நகர், சென்னகிரி, பாப்பாரப்பட்டி, ஆட்டையாம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இளம்பிள்ளை: இளம்பிள்ளை சந்தப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பார்வதி பரஞ்ஜோதிஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி மூலவர் சிறப்பு அன்னாபிஷேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். ஓமலூர்: ஓமலூர் அருகே கருப்பூர் கைலாசநாதர் கோயிலில் அன்னாபிசேக விழா நடைபெற்றது. இதில், மூலவர் சிவலிங்கத்திற்கு 500 அரிசி சாதம் மற்றும் காய்கறி, கனிகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டு சென்றனர்.

Related Stories: