மகள் தற்கொலைக்கு காரணமான மருமகன் மீது நடவடிக்கை

சேலம், நவ.8: சேலத்தில் காதல் திருமணம் செய்த மகள் தற்கொலை செய்ததற்கு காரணமான மருமகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் தாய் கண்ணீர் மல்க புகார் மனு கொடுத்தார். சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பிடாரிஅம்மன்கோயில் பகுதியை சேர்ந்தவர் அம்மாசி (48). இவர் நேற்று, தனது உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்து கண்ணீர் மல்க புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: 20 வருடங்களுக்கு முன் எனது கணவர் வீரமுத்து, பிரிந்து சென்றுவிட்டார். அதன்பின் நான், பிள்ளைகளை படிக்க வைத்தேன். இளைய மகள் சுகன்யா (23), இன்ஜினியரிங் முடித்துவிட்டு, சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்தார். அப்போது, அதே நிறுவனத்தில் வேலை பார்த்த காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த பாலாஜி என்பவர், என் மகளிடம் திருமண ஆசை காட்டி காதலித்தார். இதை அறிந்து, எனது மகளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன். பின்னர், மீண்டும் பாலாஜி வந்து என் மகளை அழைத்துச் சென்று, திருமணம் செய்துகொண்டார்.

கடந்த 2 மாதத்திற்கு முன் மகள் சுகன்யாவிடம் ₹10 லட்சம் பணம், 5 பவுன் நகை வாங்கி வந்தால் தான், உன்னுடன் குடும்பம் நடத்துவேன் எனக்கூறி அடித்து விரட்டிவிட்டார். மேலும், வீட்டிற்கு கள்ளக்காதலியை வரவழைத்து பாலாஜி இருந்துள்ளார். சாதி பெயரை சொல்லி விரட்டி விட்டார். நடந்ததை என்னிடம் கூறிய நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் என் மகள் சுகன்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி விசாரித்த ஏத்தாப்பூர் போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாக பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், என் மகள் சாவிற்கு காரணமான பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: