அரசு மருத்துவமனையில் தீக்காயம் ஒருங்கிணைந்த வளாகம் கட்டுவதில் தாமதம்

கோவை, நவ. 5:  கோவை அரசு மருத்துவமனையில் தீக்காயம் மற்றும் விபத்து, அவசர சிகிச்சை பிரிவுக்கான ஒருங்கிணைந்த வளாகம் கட்ட அனுமதி கிடைக்காததால் தாமதம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் தீக்காயங்களினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, தேசிய தீக்காய தடுப்பு மற்றும் மேலாண்மை என்ற திட்டத்தை துவங்கியது. இதனை மத்திய அரசின் சுகாதார பணிகள் தலைமை அலுவலகம் கண்காணிக்கிறது. இத்திட்டத்தின் கீழ், பல்வேறு அரசு மருத்துவமனைகளின் சிறப்பு தீக்காய சிகிச்சை துறை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. இதில், தமிழகத்தில் கோவை, வேலுார், சேலம் ஆகிய மூன்று அரசு மருத்துவ கல்லுாரிகளில் சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவையும் அதே கட்டிடத்தில் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கான வரைபடம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்தது.

மேலும், கட்டிடம் மற்றும் கருவிகளுக்காக ரூ.2.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நிர்வாக அனுமதி கிடைப்பதில் இழுபறி நீடித்து வருவதால் கட்டுமான பணிகள் துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் அசோகன் கூறுகையில், “இந்த திட்டத்துக்கு, மத்திய அரசு, 60 சதவீதம், 40 சதவீதம் என்ற விகிதத்தில் நிதியை ஒதுக்கும். இதன் மூலம் தீக்காய சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையின் தரம், அங்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், புதிய தொழில்நுட்பங்கள் புகுத்த முடியும். கட்டுமானப்பணிகளுக்கான பூமி பூஜை போடப்பட்ட நிலையில் கட்டடம் அமையும் இடம் மாற்றப்பட்டது. இதனால், புதிய பரிந்துரைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் அனுமதி கிடைத்து கட்டுமான பணிகள் துவங்கும்” என்றார்.

Related Stories: