பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்துவிட்டு கடைக்கு தீவைத்த கொள்ளையன்

மயிலாடுதுறை, அக்.25:மயிலாடுதுறை அருகே மளிகை கடையில் கொள்ளையில் ஈடுபட்ட ஆசாமிகள் பொருட்களுக்கு தீவைத்ததால் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆட்டோ கங்காபுரம் மேலத்தெருவில் மளிகைக் கடை நடத்தி வருபவர் மைக்கேல் அந்தோணி மகன் கிறிஸ்டோபர் (30). தீபாவளியை முன்னிட்டு கடையில் மளிகை பொருட்களை வாங்கி குவித்து வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் 10.30மணிக்கு கடையை பூட்டி விட்டு அருகிலுள்ள வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் அதிகாலை 3 மணியளவில் அவ்வழியாக சென்ற பால்காரர் கடை தீப்பற்றி எரிகிறது என்று சத்தம் போட்டுள்ளார். உடனே கிறிஸ்டோபர் மற்றும் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அணைத்தனர். இருப்பினும் கடையில் இருந்த ஒட்டுமொத்த பொருட்களும் எரிந்தும் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு நாசமாகி விட்டது.

கடைக்குள் புகுந்து மேஜையில் வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தை பார்த்தபோது அதில் பணம் திருடு போயிருந்தது. மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களும் திருடப்பட்டிருந்தது. கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரொக்கம் மற்றும் பொருட்களை திருடிச்சென்று, மற்ற பொருட்களை தீவைத்து கொளுத்தி விட்டு சென்றது தெரியவந்தது. நாசமான பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை டிஎஸ்பி வெள்ளத்துரை, பாலையூர் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: