டாஸ்மாக் கடைக்கு வழி கேட்டு அழைத்து சென்றபோது பைக்கில் சிறுவனை கடத்துவதாக நினைத்து வாலிபருக்கு தர்மஅடி ஒரத்தநாடு அருகே பரபரப்பு

ஒரத்தநாடு, அக். 24: ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் கடைக்கு வழி கேட்டு அழைத்து சென்றபோது பைக்கில் சிறுவனை கடத்துவதாக நினைத்து வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். தஞ்சை மாவட்டம்,ஒரத்தநாடு டவுன் வடக்கு தெருவை சேர்ந்த ஜெகதீசன் மகன் முருகானந்தம் (22). இவர் நேற்று முன்தினம் ஒரத்தநாட்டில் இருந்து பாப்பாநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பைக்கில் சென்றார். அங்கு டாஸ்மாக் கடை இருக்கும் இடம் தெரியவில்லை. இதனால் அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த தொண்டராம்பட்டு மேலக்காலனியை சேர்ந்த தனபால் மகனான 6 வயது சிறுவனிடம் டாஸ்மாக் கடை எங்கே உள்ளது என்று கேட்டார். அப்போது டாஸ்மாக் இருக்கும் இடத்தை சிறுவன் தெரிவித்தார். அதற்கு எனக்கு அடையாளம் தெரியவில்லை, என்னுடன் வந்து டாஸ்மாக் கடையை காட்டுமாறு முருகானந்தம் கூறினார். இதையடுத்து பைக்கில் சிறுவனை முருகானந்தம் ஏற்றி சென்றார்.

இதை பார்த்த பொதுமக்கள், சி்றுவனை பைக்கில் கடத்தி செல்வதாக கூச்சலிட்டனர். இதையடுத்து முருகானந்தத்தை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது முருகானந்தத்திடம் பாப்பாநாடு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் டாஸ்மாக் கடைக்கு செல்ல வழி தெரியவில்லை. இதனால் டாஸ்மாக் கடையை காண்பிக்குமாறு பைக்கில் சிறுவனை ஏற்றி சென்றேன் என்று முருகானந்தம் தெரிவித்தார். இதையடுத்து இனிமேல் இதுபோன்று செய்யக்கூடாது என்று கண்டித்து முருகானந்தத்தை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Related Stories: