கொத்தவாச்சேரி ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட கிராம சேவை மையத்தை திறக்க வலியுறுத்தல்

நெய்வேலி, அக். 24: குறிஞ்சிப்பாடி அடுத்த கொத்தவாச்சேரி ஊராட்சியில் சுமார் இரண்டாயிரத்துக்கும்  மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள மக்களின் வசதிக்காக சிட்டா, பட்டா, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ரேஷன் கார்டு, முதியோர் உதவி தொகை,  வங்கி கடன் உள்ளிட்ட சேவைகளுக்கு விண்ணப்பிக்க கிராம சேவை மையம் கட்டிடம் கொத்தவாச்சேரி ஊராட்சியில் ரூ.17 லட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2016ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகள் கடந்த நிலையில், கிராம சேவை மையம் திறக்கப்படாமல் பூட்டியே  கிடக்கிறது. இதனால் அரசு பணம் விரயமாவதோடு, பொதுமக்கள் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க முடியாமல் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகம் மற்றும் தனியார் மையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, பூட்டி கிடக்கும் கிராம சேவை மையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க  வேண்டும் என இப்பகுதி  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: