டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்

பண்ருட்டி, அக். 24: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்காக பண்ருட்டி நகராட்சி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுத்தார். பின்னர் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து தூய்மை பணியில் ஈடுபட அறிவுரை வழங்கினார். இதன்பேரில் நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமையில் துப்புரவு அலுவலர் சக்திவேல், ஆய்வாளர்கள் ஆரோக்கியசாமி, தின்னாயிரமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் போலீஸ் லைன் 5, 6, 7வது வீதிகள், செட்டிப்பட்டறை வீதி, திருவதிகை ஆகிய மூன்று இடங்களில் துப்புரவு பணியாளர்களைகொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தனர். இதில் கொசு புழுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த வீட்டுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் வி.ஆண்டிகுப்பத்தில் இரண்டு வீடுகளுக்கும் அபராதம் விதித்தனர். தொடர்ந்து நேற்று நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமையில் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசு புழுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவையற்ற பொருட்கள், தேங்காய் மட்டைகள், டயர்களில் இருந்த தண்ணீர் அகற்றப்பட்டது. மேலும் பேருந்து நிலையம், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும், நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. அப்போது சார்பு நீதிபதி சாதிக்பாஷா, குற்றவியல் நீதிபதி கற்பகவள்ளி ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்த வழக்காளிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள். அப்போது ஒவ்வொரு வழக்கறிஞரும் தங்கள் வீடுகளை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். மற்றவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

Related Stories: