இந்தியாவின் முதன்மை நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும் மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன் கோரிக்கை

தஞ்சை,அக்.23: இந்தியாவின் முதன்மை நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 12வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தலைமை வகித்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது: திருக்குறளை இந்தியாவின் நூலாக அறிவிக்க மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும். திருக்குறளை உலக நூலாக யுனெஸ்கோ அங்கீகரிக்க வேண்டுமென மொரீசியஸ் நாட்டின் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் வலியுறுத்தியுள்ளார்.

திருக்குறளை இந்தியாவின் நூலாக மத்திய அரசு அங்கீகாரம் செய்ய வேண்டுமென ஏராளமானோர் வலியுறுத்தி வருகின்றனர். திருக்குறளை முதன்மை நூலாக அங்கீகாரம் செய்யுமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைக்கிறேன்.தமிழ்ப்பல்கலைக்கழகம் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ் வளர் மையத்தை உலகளவில் 1,000 இடங்களில் அமைக்க விரும்புகிறோம். இதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே இம்மையம் உலக முழுவதும் அமைய மத்திய அரசுக்கு தமிழக ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.விழாவில் திரைப்பட குணச்சித்திர நடிகர் சார்ளி உள்ளிட்ட 150 பேருக்கு முனைவர் பட்டமும், 444 மாணவ, மாணவிகளுக்கு பட்டப்படிப்பிற்கான பட்டமும் கவர்னர் பன்வாரிலால் வழங்கினார்.

Related Stories: