மாவட்டத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை கொசு உற்பத்திக்கு காரணமான சுங்கச்சாவடிக்கு பைன்

வாழப்பாடி.  அக்.17: சேலம் மாவட்டத்தில் சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள  நிலையில், சுற்றுப்புற தூய்மையில் மெத்தனப்போக்குடன் செயல்பட்டதாக  சுங்கச்சாவடிக்கு ₹50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஆத்தூரில்  நடத்திய சோதனையில் கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த 4 வீட்டின்  உரிமையாளர்களிடம் அபராம் வசூலிக்கப்படடது. சேலம்- சென்னை தேசிய  நெடுஞ்சாலையில் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி எம்.பெருமாபாளையம் பகுதியில்  சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் குப்பை கழிவுகள் குவிந்து  கிடப்பதாலும், மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி கிடப்பதாலும் சுகாதார  சீர்கேடு அபாயம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது. இதன்பேரில், நேற்று  அப்பகுதியில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ஊராட்சிகள் உதவி  இயக்குனர் கோபிநாத் தலைமையில், அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர்  அன்புராஜன்(கி.ஊ.), மாவட்ட மலேரியா அலுவலர் திருமலைவாசன், வட்டார மருத்துவ  அலுவலர் கவிதா, வட்டார சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல துணை  வட்டார வளர்ச்சி அலுவலர் வித்யா லட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர்  ஈடுபட்டனர்.

Advertising
Advertising

இதில், டோல்பிளாசா பகுதியில் குப்பை கழிவுகளை முறையாக  அப்புறப்படுத்தாமல் குவித்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும்,  இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் தகர தடுப்புகளை அப்புறப்படுத்தாமல் நீண்ட  நாட்களாக அப்படியே போட்டு வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதனால், டெங்கு  பரப்பும் கொசு உற்பத்தி அதிகரித்திருப்பதை கண்டு அதிகாரிகள்  அதிர்ச்சிக்குள்ளாகினர். இதன்மூலம் சுகாதார சீர்கேட்டிற்கு காரணமாக  இருந்ததாக டோல்கேட் நிர்வாகத்திற்கு ஊராட்சிகள் உதவி இயக்குனர் கோபிநாத்  மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புராஜ் ஆகியோர் ₹50 ஆயிரம் அபராதம்  விதித்தார். அந்த தொகை உடனடியாக வசூலிக்கப்பட்டது. ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 33 வார்டுகளிலும் உள்ள வீடுகள் மற்றும் திருமண மண்டபங்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தொட்டிகளில் கொசு உற்பத்தியை தடுக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இப்பணிகளை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, 1வது வார்டுக்குட்பட்ட கோட்டை பகுதியில் 35 வீடுகளுக்கு நேரில் சென்று சோதனையிட்டார். அப்போது, அங்குள்ள 4 வீடுகளில் கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக வீட்டு உரிமையாளர்களுக்கு தலா ₹400 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி கூறுகையில், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் இருப்பு வைக்கப்படும் தண்ணீரை சுகாதாரத்துறையினர் கூறும் விதிமுறைகளின் அடிப்படையில் பாதுகாப்பாக வைத்திட வேண்டும். அதிகாரிகளின் ஆய்வின்போது கொசுப்புழு கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். மேலும், பருவமழை தீவிரமடைந்துள்ளதால் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்றார்.

Related Stories: