விருத்தாசலம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு

விருத்தாசலம், அக். 17: சென்னையிலிருந்து விருத்தாசலம் வழியாக திருச்சி, மதுரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் நடைமேடை இருப்புப் பாதை ஆகியவை குறித்து தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் தங்கும் அறை, உணவு அறை, நடைமேடை, இருப்புப்பாதை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கிளை செயலாளர் கணேஷ்குமார், தலைவர் செல்வம், பொருளாளர் வீரக்குமார் ஆகியோர் தலைமையில் ரயில்வே சங்கத்தினர் கோட்ட மேலாளர் அஜய்குமாரிடம் மனு அளித்தனர். அதில் விருத்தாசலம் ரயில்வே ஊழியர்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர், மின்சார, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தினர். மனுவை பெற்றுக்கொண்டவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தொடர்ந்து விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து அரியலூர் வரையிலான இருப்புப்பாதை மற்றும் நடைமேடைகளை ஆய்வு செய்தார்.  ஆய்வின்போது கோட்ட செயற்பொறியாளர் ராஜராஜன், கார்த்திகேயன், விருத்தாசலம் ரயில் நிலைய மேலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: