கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் இரவு 8 மணிக்கு மேல் சுகாதார வளாகம் பூட்டப்படுவதால் பயணிகள் அவதி 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

கும்பகோணம், அக். 16: கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி சுகாதார வளாகத்தை இரவு 8 மணிக்கு மேல் பூட்டி விடுவதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே 24 மணி நேரம் சுகாதார வளாகம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் பழமைவாய்ந்த கோயில்கள் அதிகளவில் உள்ளன. இதனால் கும்பகோணம் பகுதிக்கு தினம்தோறும் வெளிமாநிலம், வெளிமாவட்டம், உள்ளூரை சேர்ந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் கும்பகோணம் பகுதியில் குத்துவிளக்கு பட்டறைகள் அதிகளவில் உள்ளதால் வியாபாரிகளும் வந்து செல்கின்றனர். இதனால் கும்பகோணம் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். அதில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள், பொதுமக்கள், வணிகர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி சுகாதார வளாகத்தை பூட்டி வைத்து விடுகின்றனர். இதனால் இரவு மற்றும் அதிகாலையில் வரும் பெண்கள், முதியவர்கள், ஆண்கள் உள்ளிட்டோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பேருந்து நிலையத்தின் வடக்கு மூளையில் உள்ள சுகாதார வளாகத்துக்கு காசு கொடுத்து சென்றாலும் சற்று தொலைவில் இருப்பதால் பயணிகள் சென்று வருவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பெரும்பாலானோர் பேருந்து நிலைய வளாகத்தின் ஓரங்களை கழிவுநீர் கழிப்பிடமாக மாற்றி விடுவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

Advertising
Advertising

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பயணிகள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல உள்ளனர்.எனவே கும்பகோணம் புதிய பேருந்து நிலைய சுகாதார வளாகத்துக்கு இரவு நேரங்களில் பாதுகாப்புக்கு ஆட்களை நியமித்து 24 மணி நேரமும் திறந்து வைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து கும்பகோணம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கும்பகோணம் பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகம் காலை முதல் இரவு 8 மணி வரை திறந்து வைக்கப்படுகிறது

அதன்பின்னர் பூட்டி விடுகின்றனர். இதனால் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே பயணிகளின் நலன்கருதி 24 மணி நேரம் சுகாதார வளாகத்தை திறந்து வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: