வலங்கைமான் அருகே தென்குவளவேலி கிராமத்தில் பேரிடர் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

வலங்கைமான், அக்.10: வலங்கைமான் அடுத்த தென்குவளவேலி கிராமத்தில் பேரிடர் காலங்களில் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குழந்தைகள் செல்லாமல் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க தீயணைப்புதுறை சார்பில் பேரிடர் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்க உள்ள நிலையில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வலங்கைமான் தீயணைப்புதுறை நிலைய அலுவலர் மூர்த்தி தலைமையில் தீயணைப்பு துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அப்பகுதியில் உள்ள வெண்ணாற்றில் செய்து காண்பித்தனர். அப்போது பருவமழை காலங்களில் திடீரென மழைநீர் சூழ்ந்தால் வீட்டில் பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் குடம், காலி வாட்டர் பாட்டில்களின் மூட்டை மற்றும் வாட்டர் கேன்கள் மூலம் தப்பிக்கும் வழிமுறை குறித்து செய்முறை விளக்கம் செய்து காட்டினர்.

மேலும் படகு மூலம் வெள்ளத்தில சிக்கியவர்களை மீட்பது குறித்த செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் பேசுகையில், இயற்கை இடர்பாடு காலங்களில் ஏற்படும் உயிரிழப்பைவிட நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழக்கும் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே பெற்றோர்கள் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குழந்தைகள் செல்லாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். வட்டாட்சியர் இஞ்ஞாசிராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: