அறந்தாங்கியில் சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பற்ற அரசு கல்லூரி

அறந்தாங்கி,அக்.10: சுற்றுச்சுவர் இல்லாமல் அறந்தாங்கி அரசு கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் கல்வி பயின்று வருகின்றனர். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பொற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறந்தாங்கியில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி உறுப்பு கல்லூரி தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக கல்லூரி இயங்கி வந்தது. தொடர்ந்து கல்லூரிக்கு நிரந்தரமான கட்டிடம் கட்ட திமுக அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடம் கட்டும் பணி தொடங்குவதற்குள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார்கோவில் செல்லும் சாலையில் கள்ளனேந்தல் பேருந்து நிறுத்தம் அருகில், பெருநாவலூர் வருவாய் கிராமத்தில் கல்லூரி கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டு, கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி உறுப்பு கல்லூரிக்கு கட்டிடம் கட்டப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக வகுப்புகள் நடந்து வருகின்றன. பல கோடி ரூபாய் மதிப்பில் கல்லூரி கட்டிடம் கட்டப்பட்ட போதிலும், கல்லூரியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள மரங்கள் அடர்ந்த பகுதியில் இருந்து பாம்பு, தேள் போன்ற விஷ சந்துக்கள் கல்லூரி வளாகத்திற்கு வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் அங்கு பயிலம் மாணவ, மாணவியர் அச்சத்துடனே கல்வி பயில வேண்டி உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகத்தில் இருந்த கல்லூரி, கல்லூரி கல்வி இயக்கக நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டது. நிர்வாகம் மாற்றப்பட்ட போதிலும், கல்லூரிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை.

அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரியில் சுற்றுச்சுவர் இல்லாததால், கல்லூரி நிர்வாகத்தால், மாணவ, மாணவியரை முறையாக கண்கானிக்கக்கூட முடிவதில்லை. நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் பயிலும் இக்கல்லூரியில் சுற்றுச்சுவர் இல்லாததால், கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் தினமும் அச்சத்துடனேயே செல்ல வேண்டி உள்ளது. மேலும் சுற்றுச்சுவர் இல்லாததால் கல்லூரி வளாகத்தில் தேங்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, நோய்களை பரப்புகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு சுற்றுச்சுவர் கட்ட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவ,மாணவியர், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையாகும்.

Related Stories: