தீயணைப்பு துறையினருக்கு குடியிருப்புகள் கட்டுவதற்கு இடம் ஒதுக்குவதில் இழுத்தடிப்பு

உத்தமபாளையம், அக்.9: உத்தமபாளையத்தில் தீயணைப்பு துறையினருக்கு குடியிருப்புகள் கட்டுவதற்கு இடம் ஒதுக்குவதில் இழுத்தடிப்பு தொடர்கிறது. உத்தமபாளையத்தை மையமாக கொண்டு தீயணைப்புநிலையம் செயல்படுகிறது. சின்னமனூர், ஓடைப்பட்டி, தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், அனுமந்தன்பட்டி உள்ளிட்ட ஊர்களை சுற்றிலும் தீவிபத்துக்கள் ஏற்பட்டால் இங்கு இருந்துதான் செல்லவேண்டும். இதேபோல் கம்பத்திலும் தீயணைப்பு நிலையம் உள்ளது. இங்கும் அரசின் குடியிருப்பு இல்லை. இதனால் 24 மணிநேரமும் தீயணைப்புத்துறையினர் மிக சுறுசுறுப்பாக இருக்கவேண்டும். எனவே இத்துறையை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் குடியிருப்புகள் கட்டிதருவதற்கு என கடந்த 10 வருடத்திற்கு முன்பே இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த இடம் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அனுமதி தரவில்லை. எனவே மாற்று இடம் தரவேண்டும் என தீயணைப்புத்துறையினர் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தனர். இதில் எந்தவிதமான நடவடிகையும் எடுக்கவில்லை. இதனால் தீயணைப்புத்துறையில் பணியாற்றி வருபவர்கள் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து மாறுதலாகி வருபவர்கள் மிகவும் திண்டாடுகின்றனர். தீயணைப்புத்துறையினர் கூறுகையில், ‘தேனி மாவட்டத்தில் போலீசாருக்கு என தனியாக குடியிருப்புகள் உள்ளன. ஆனால் தீயணைப்பு துறையினருக்கு அனைத்து ஸ்டேசன்களிலும் இல்லை. ஒரு சில ஊர்களை தவிர. எனவே பாளையத்தை மையமாக வைத்து குடியிருப்புகள் கட்டுவதற்கு தேனி கலெக்டர் வருவாய்த்துறையினர் மூலம் இடம் பெற்றுதரவேண்டும்’ என்றனர்.

Related Stories: