மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் கலெக்டர், கமிஷனர் ஆய்வு

மதுரை, அக். 4: மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் காற்றுப்புகும் நுண்உரம் செயலாக்க தொட்டியை கமிஷனர் விசாகன் தலைமையில் கலெக்டர் ராஜசேகர் ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் ரூ.26.50 லட்சத்தில் உரம் தயாரிக்கும் மையம் கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது.

இங்கு நுண்ணுயிரியல் முறையில் நாள்தோறும் 6 டன் அளவு மக்கும் கழிவுகள் கையாளப்படுகிறது. இதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள காற்றுப்புகும் 18 தொட்டிகளில் நிரப்பப்பட்டு மக்க வைக்கப்படுகின்றன. 45 நாட்களில் குப்பைகள் மக்கி உரமாகி நாள்தோறும் 450 கிலோ முதல் 500 கிலோ வரை உரம் பெறப்படுகிறது. மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் காற்றுப்புகும் நுண்உரம் செயலாக்க தொட்டியை கமிஷனர் விசாகன் தலைமையில் கலெக்டர் ராஜசேகர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது நகரப்பொறியாளர் அரசு, உதவி கமிஷனர் பழனிச்சாமி, செயற்பொறியாளர் ராஜேந்திரன், நகர்நல அலுவலர் (பொ) வினோத்ராஜா உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: