பேச்சுவார்த்தையில் தீர்வு உண்ணாவிரதம் வாபஸ்

ஸ்ரீமுஷ்ணம், அக். 2: ஸ்ரீமுஷ்ணம் அருகே குணமங்களம் ஊராட்சியில், அங்குள்ள பொதுப்பணித்துறை ஏரியை  நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு நிதி மூலம் ஆழப்படுத்த வலியுறுத்தியும், நீர்வள, நிலவள திட்டத்தின்கீழ் ரூ.118 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த நிதி மூலம் நடைபெறும் பணிகள் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ளும் வகையில் தகவல் பலகை அமைப்பது, குணமங்களம் எம்.பி அக்ரஹாரம் சாலையை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குணமங்களம் ஊராட்சியில் உண்ணாவிரதம் நடைபெறும் என கிராம மக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் புகழேந்தி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. விருத்தாசலம் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம் உதவி பொறியாளர் சோழராஜன், காட்டுமன்னார்கோவில் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் கார்த்திக், சாலை ஆய்வாளர் வெற்றிசெல்வன், முஷ்ணம் வருவாய் ஆய்வாளர் கோவிந்தன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், குணமங்களம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ், கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், குணமங்களம் ஏரியை ஆழப்படுத்துவது தொடர்பாக ஆட்சியருக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும் என்றும், நீர்வள, நிலவள திட்டத்தின்கீழ் பணி விவர பலகையை அமைத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாகவும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளரால் உறுதி அளிக்கப்பட்டது.

குணமங்களம் எம்பி அக்ரஹாரம் சாலையை சீரமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க போவதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்காலிகமாக கிராவல் அமைப்பது, பின்னர் தார்சாலை அமைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தை மக்கள் வாபஸ் பெற்றனர்.

Related Stories: