பெண்ணாடம் அருகே அரசு பள்ளியை சூழ்ந்த மழைநீர்

பெண்ணாடம், அக். 2: பெண்ணாடம் அருகே அரசு பள்ளியை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்துள்ளது எரப்பாவூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பள்ளியை சுற்றி மழைநீர் தேங்கி ஏரிபோல் காட்சியளிக்கிறது. இதனால் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி அருகில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வாழும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் இரவு நேரங்களில் கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் சிறியவர்கள், முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இரவில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். எரப்பாவூர் ஊராட்சியில் எந்த தெருக்களிலும் வடிகால் வாய்க்கால் வசதிகள் இல்லை. இதனால் தற்போது பெய்து வரும் பருவ மழையால் பள்ளியை சுற்றி மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், ஆசிரியர் ஆசிரியைகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு மழைநீர் மற்றும் சாக்கடைகளை அகற்றி ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: