காந்தி ஜெயந்தியையொட்டி 121 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை 2ம் தேதி நடக்கிறது

பெரம்பலூர், செப். 30: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் வரும் 2ம் தேதி கிராமசபை கூட்டம் நடக்கிறது. பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் வரும் 2ம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. ஊராட்சி தனி அலுவலர்களால் நடத்தப்படும் கூட்டத்தில் ஏற்கனவே நடந்த கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைதெரிவிக்க வேண்டும். அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிப்பறைகளை பயன்படுத்துதல் மற்றும் பயன்படுத்தாத நபர்களின் பெயர்களை வாசித்து ஊராட்சி தனி அலுவலர்கள் செய்த பணிகளை தெரிவிக்க வேண்டும்.

அரசு அலுவலர்கள் கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிய வேண்டும். அரசு நலத்திட்டங்கள் வழங்குவதோடு அரசு நிர்வாகத்தில் உள்ள குறைகளை மக்களிடையே கேட்டறிய வேண்டும்.கூட்டத்தில் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாங்கள் வாக்காளர்களாக சார்ந்துள்ள கிராம ஊராட்சிகளில் பங்கேற்க வேண்டும். கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க, ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால் பற்றாளர்களும், வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்களும் மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் பங்கேற்று கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்துக்கு வழிவகுத்து உரிய ஒத்துழைப்பு அளித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: