ஆலங்குடியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

புதுக்கோட்டை, செப்.26: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட காய்கறி கடைகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றியதால் வியாபாரிகள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பள்ளிவாசல் வீதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் பொக்லைன் மூலம் அகற்ற தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காய்கறி கடை வியாபாரிகள் மண்ணெண்ணெய் பாட்டில்களை கையில் ஏந்தியபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த செயல் அலுவலர் கணேசன், தாசில்தார் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் பஸ் மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள், தாங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இடத்தில் காய்கறிகடை நடத்தி வருகிறோம். தீபாவளி பண்டிகை வரவிருப்பதால், வரும் நவ.5ம் தேதி வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது என்று ஆலங்குடி வர்த்தக சங்கத்தினர் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசனிடம் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, செயல் அலுவலர் கணேசன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பஸ் மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

Related Stories: