சூலூரில் தென்னை மரத்தில் கள் பானைகள் உடைப்பு

சூலூர்,செப்.20:சூலூர் அருகே தென்னை மரத்தில் கட்டப்பட்டிருந்த கள் பானைகளை போலீசார் உடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையை அடுத்த சூலூர் முத்துக்கவுண்டன்புதூரில் கந்தசாமி என்பவரது தோட்டத்தில் நேற்று மதுவிலக்கு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த தோட்டத்தில் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்குவதற்காக பானைகள் கட்டப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து போலீசார் அந்த மண் பானைகளை உடைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சங்க தலைவர் பாபு தலைமையில் மதுவிலக்கு போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தாங்கள் தென்னை மரத்திலிருந்து அரசின் அனுமதி பெற்று நீரா பானத்தை இறக்குவதாகவும், ஆனால் அதை கள் எனக்கூறி மதுவிலக்கு போலீசார் அத்துமீறி தோட்டத்திற்குள் நுழைந்து பானைகளை உடைத்துள்ளதாகவும், இதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்துறை அதிகாரி தங்கராஜிடம் விவசாயிகள் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர். மேலும் நீரா பானம் இறக்கும் விவசாயிகள் மீது போலீசார் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டால் விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய போராட்டம் மற்றும் மறியல் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: