சுற்றுலாப்பயணிகளை காக்க பந்தல் அமைப்பு

மேட்டுப்பாளையம்,மே9: ஊட்டி,கொடைக்கானல் போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு கோடைக்காலங்களில் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனிடையே தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலில் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் மக்கள் குளுகுளு பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களை தேடிச்செல்கின்றனர். இது அந்த மலைப்பிரதேசங்களின் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துவதாகக்கூறி அதனை கட்டுப்படுத்த கொரோனா காலத்தை போல இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் (7ம்தேதி) முதல் ஜூன் 30ம் தேதி வரையில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது.அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திற்குள் செல்லும் 13 வழித்தடங்களிலும் இ- பாஸ் சோதனை நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது.

கோவையில் இருந்து நீலகிரி செல்லக்கூடிய ஊட்டி சாலையில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கல்லாறு தூரிப்பாலம் சோதனைச்சாவடி, கோத்தகிரி சாலையில் வனக் கல்லூரி சோதனைச்சாவடி என இரு இடங்களில் இ-பாஸ் சோதனை இரண்டாம் நாளாக நேற்று நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய வாகனங்கள் இ-பாஸ் பெற்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இ-பாஸ் பெறாத வாகனங்களை நிறுத்தி இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறைகளை சொல்லி வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி இ-பாஸ் எடுத்த பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் கல்லாறு தூரிபாலம் மற்றும் கோத்தகிரி சாலையில் வனக்கல்லூரி சோதனைச் சாவடிகளின் வழியாக வரும் வாகனங்களில் இ-பாஸ் சோதனை செய்யும் போது வெயிலில் இருந்து சுற்றுலா பயணிகளில் காக்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

The post சுற்றுலாப்பயணிகளை காக்க பந்தல் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: