டம்மி டோக்கன் போட்டு ஓமலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடு

ஓமலூர், செப்.19:  ஓமலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆன்லைனில் டம்மியாக டோக்கன் பதிவு செய்து இடைத்தரகர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இதனை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓமலூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய இரண்டு தாலுகாவில் உள்ள 48 வருவாய் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், பத்திரப்பதிவு செய்து வருகின்றனர். இதனால், ஓமலூர் சார் பதிவாளர் அலுவலகம் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும். தற்போது பத்திரப்பதிவு செய்வதற்கு முன், ஆன்லைன் மூலம் தங்கள் பதிவுகளை பதிவிட்டு டோக்கன் பெறவேண்டும். அந்த டோக்கன்படி, ஒவ்வொரு நபராக அனுப்பி பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறையின்படி, ஒரு நாளைக்கு 100 பதிவுகள் ஓமலூர் பத்திரபதிவு அலுவலகத்தில் செய்யப்படுகிறது. ஆனால், போலி டோக்கன் முறைகளால் ஒரு நாளைக்கு 50 பத்திரபதிவுகள் மட்டுமே செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஓமலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், டோக்கன் பதிவு தொடங்கி அரைமணி நேரத்தில் நூறு பத்திரப்பதிவுக்கான டோக்கன்களையும் பதிவு செய்யப்பட்டு விடுகிறது. ஆனால், ஒரு நாளைக்கு பத்து முதல் 20 பத்திரப்பதிவு வரை மட்டுமே செய்யப்படுவதாகவும், மீதமுள்ள டோக்கன்களை யாரும் பதிவுக்கு வராததால், அப்படியே நிறுத்தப்படுவதாக பாதிக்கப்படும் பத்திர எழுத்தர்களும், மக்களும் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘இடைத்தரகர்கள் வேண்டுமென்றே போலியான பெயரில் டோக்கன் போட்டு, அதை அலுவலக ஊழியர்கள் உதவியுடன் வசதியானவர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இதுபோல் போலியாக டோக்கன் போடுவதால் தினமும் பத்திரப்பதிவு செய்யப்படுவது குறைந்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், பொதுமக்களையும் அலைக்கழிக்கின்றனர். எனவே, உயர் அதிகாரிகள் போலி டோக்கன் பெறுபவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: