மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

கடலூர், செப். 11: கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்  தலைமையில் நேற்று  மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் வட்டார அளவில் 13 மண்டல அளவிலான குழுக்களும், நகராட்சி அளவிலான 5 மண்டல குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. அனைத்து மண்டல அலுவலர்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மண்டலங்களில் மிகவும் பாதிக்கக்கூடிய இடங்களை ஆய்வு செய்தும், புயல் பாதுகாப்பு மையங்களை ஆய்வு செய்தும், பொது விநியோகம் மூலம் வழங்கப்படும் உணவு பொருட்கள் தேவையான அளவு உள்ளனவா என ஆய்வு செய்தும், முதல் தகவல் அளிப்பவர்களுடன் களஆய்வு மேற்கொண்டும், பேரிடர் காலங்களில் தேவையான இயந்திரங்கள் உள்ளனவா எனவும் ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.மேலும், கடலூர் மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள், ஏரிகள், குளம் ஆகியவை சரியான முறையில் தூர்வாரப்பட்டுள்ளதா என்றும் நீர்வழி பாதையில்ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருப்பின் அதனை சரிசெய்யுமாறும் அத்துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்குவதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் இருக்குமாறும், மேலும் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களை தங்க வைப்பதற்கு பள்ளிகளை ஆய்வு செய்து அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி புயல் பாதுகாப்பு மையங்களை ஆய்வு செய்யுமாறும், அப்பகுதியில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து பொதுமக்களை தங்க வைப்பதற்கு தயார் நிலையில் வைத்திருக்குமாறு மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால் சரி செய்ய மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் போன்றவைகள் தயார் நிலையில் வைத்திருக்குமாறு பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தினார். மேலும், மழைக்காலங்களில் நெடுஞ்சாலைகளில் விழும் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த தேவையான மரம் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும் துறை சார்ந்தவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மழை வெள்ளம் பாதித்த இடங்களில் உடனுக்குடன் மழை நீரை வெளியேற்றவும், குளோரினேஷன் செய்யப்பட்ட சுத்தமான குடிநீரை வழங்கவும், மழைநீரால் தொற்றுநோய் பரவாத வகையில் பொது சுகாதாரத்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: