காவிரியில் வெள்ளப்பெருக்கை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 லட்சம் மணல் மூட்டை தயார்

கும்பகோணம், செப். 11: காவிரியில் வெள்ளப்பெருக்கை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதையொட்டி கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து அதிகளவில் உபரிநீர் மேட்டூருக்கு திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து மேட்டூரிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடத்தில் கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது.
Advertising
Advertising

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து காவிரிக்கு 9,000 கன அடியும், தஞ்சை வழியே பாயும் கல்லணை கால்வாயில் 2,500 கன அடியும், சென்னை உள்ளிட்ட நகரங்களின் கூட்டு குடிநீர் திட்டத்துக்காக கொள்ளிடத்தில் 18,000 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காவிரியில் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. எனவே தஞ்சை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டால் வெள்ள அபாயத்தை தடுக்க கும்பகோணம் காவிரி மற்றும் அரசலாறு பாயும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித்துறை சார்பில் ஒரு லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மணஞ்சேரி படுகை அணை பகுதியில் காவிரியின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் செல்வதால் வெள்ளம் ஏற்பட்டு கிராமத்துக்குள் நீர் புகாமல் தடுக்க ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் தயாராக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இங்குள்ள காவிரி ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியும், இங்கிருந்து தலைப்பாக பிரியும் வீரசோழன் ஆற்றில் 500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே காவிரி மற்றும் அரசலாறு ஆறுகளில் தேவையான பாதுகாப்பும் பணியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: