சாலை தோண்டப்பட்டு 3 மாதமாகியும் பணி துவங்க வில்லை

திருமங்கலம். செப்.10: பொன்னமங்கலம் அருகே 3 கி.மீ தூர சாலையை புதுப்பிக்க தோண்டி போட்டு 3 மாதமாகியும் பணிகள் துவங்காததால் கிராமமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருமங்கலம் அருகேயுள்ள பொன்னங்கலம் ஊராட்சிக்குட்பட்டது முத்துகிருஷ்ணாபுரம். பொன்னமங்கலம் வாகைகுளம் ரோட்டின் விலக்கிலிருந்து துவங்கி சாலை, முத்துகிருஷ்ணாபுரம், மேலேந்தல், முத்துபெருமாள்பட்டி வழியாக அழகுசிறை விலக்கில் முடிவடைகிறது. இந்த சாலையில் கற்கள் பெயர்ந்து மராமத்து செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சாலை புதுப்பிக்கும் பணிகள் துவங்கியது.இதற்காக பொன்னமங்கலம் விலக்கிலிருந்து அழகுசிறை விலக்கு வரையில் சாலை பெயர்த்து போடப்பட்டதால், குண்டும் குழியுமாக மாறியது. சாலை பணியை காரணம் காட்டி மதுரை பெரியா ர்நிலையத்திலிருந்து மேலேந்தல் செல்லும் டவுன்பஸ் உள்ளிட்ட கிராமங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் பொன்னமங்கலத்துடன் திரும்பி செல்கிறது. டூவிலர், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் இந்த சாலையை கடந்து செல்ல முடியவில்லை.டயர் பஞ்சராகி வாகன ஓட்டிகளை பயமுறுத்தி வருகிறது. சாலை பணியை எப்போது துவக்குவார்கள் என்பது தெரியாததால் மூன்று கிராமமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொன்னமங்கலம் அல்லது அழகுசிறை சென்று கிருஷ்ணாபுரம், மேலேந்தல் உள்ளிட்ட கிராமமக்கள் பஸ் ஏறும் நிலை உருவாகியுள்ளது. எனவே பெயர்த்து போடப்பட்ட சாலை பணிகளை துரித கதியில் முடித்து பொதுமக்களின் பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் முன்வரவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

Related Stories: