வடலூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தம்

நெய்வேலி, ஆக. 20: வடலூரில் வள்ளலாரால் உருவாக்கப்பட்ட சத்திய ஞான சபைக்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சன்மார்க்க பக்தர்கள் வருகை தந்து ஜோதி தரிசனம் செய்கின்றனர். இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருகின்றனர். இங்குள்ள வடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, சேலம், சென்னை, திருவனந்தபுரம்  ஈரோடு  உள்ளிட்ட ஊர்களுக்கு தினந்தோறும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்வதற்காக ஏராளமான பயணிகள் பேருந்து நிலையத்திற்கு வருகின்றனர்.

இதனால் பேருந்து நிலையம் எந்நேரமும் கூட்ட நெரிசலாக காணப்படும். சில தனிநபர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தை பேருந்துகள் நிறுத்தப்படும் பிளாட்பாரங்களில் பேருந்துகளின் பின்னாலும், சாலை ஓரங்களிலும் டூவீலர்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இதனால் பொதுமக்கள் பிளாட்பாரத்தில் உள்ள கடைகளுக்கு செல்வதற்கும், பேருந்துகளில் ஏறுவதற்கும் பல்வேறு இடையூறுகள் உள்ளது. மேலும் பேருந்துகளை வெளியே எடுக்க முடியாமல் டிரைவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் இதனை கண்காணித்து பேருந்து நிலையத்தில் டூவீலர்களை நிறுத்தாமல் வேறு இடத்தில் நிறுத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: