மதுரை, ஆக.2: ராஜாக்கூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பிற்கு செல்ல மறுத்து மீண்டும் சாலையோர பகுதியிலேயே மதுரை மக்கள் குடியிருந்து வருகின்றனர். அடுக்குமாடி வீடுகள் ஒதுக்கப்பட்ட ஆயிரத்து 552 பேரில் 522 பேரே குடியேறியுள்ளனர். மதுரை மாநகராட்சி பகுதியான பூக்காரத் தோப்பு, இந்திராநகர், அன்சாரி நகர், எல்லீஸ்நகர், போடிலைன், குலமங்கலம் ரோடு, தல்லாகுளம், சுடலைமுத்துப்பிள்ளை தோப்பு, சீனிநாயக்கன் தோப்பு, வைகை வடகரை ஆழ்வார்புரம், மேல அனுப்பானடி, நாகம்மாள் மடம், எப்.எப்.ரோடு, தூமாட்டி ரெங்கசாமி அய்யர் தெரு ஆகிய பகுதிகளில் சாலையோரம், ரயில்வேக்கு சொந்தமான இடங்கள், கால்வாய் புறம்போக்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. மொத்தம் இப்பகுதிகளில் 2 ஆயிரத்து 73 பேர் குடிசைகள் போட்டு குடியிருந்து வந்தனர். சாலை விரிவாக்கம், கால்வாய் தூர்வாறுதல் போன்ற பணிக்காக ஆக்கிரமிப்பில் இருந்த இந்த குடிசை வீடுகள் அகற்றப்பட்டன.
வீடுகளை இழந்த இவர்களுக்கு மறுகுடியமர்வு திட்டத்தின்படி மதுரை அருகே ராஜாக்கூரில் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஒரு வீட்டில் 2 அறைகள் மற்றும் அனைத்து வசதிகள் கொண்ட 400 சதுரடியில் வீடுகள் கட்டப்பட்டன. ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றப்பட்ட 2 ஆயிரத்து 73 பேரில் 521 பேர் வீடு வேண்டாம் எனக் கூறி சென்றனர். மீதியுள்ள 1,552 பேருக்கு மட்டும் வீடுகள் வழங்கப்பட்டன. இவர்கள் இனிமேல் சாலை, கால்வாய் உள்ளிட்டவற்றில் ஆக்கிரமிப்பு செய்து குடியேறக் கூடாது எனக் கூறி இந்த வீடுகள் கொடுக்கப்பட்டன.
வீடுகளை பெற்றுக்கொண்டவர்களில் பலர் அங்கு செல்ல மறுத்துவிட்டனர். தற்போது 552 பேர் மட்டுமே இந்த வீடுகளில் குடியேறியுள்ளனர். ஆயிரம் பேர் ராஜாக்கூரில் குடியேறாமல் மதுரை நகரில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் சாலையோரம், கால்வாய் ஓரத்தில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வருகின்றனர். புறநகர் பகுதியான ராஜாக்கூர் சென்றால் அங்கிருந்து நகருக்குள்தான் வேலைக்கு வரவேண்டும். இதனால் வீண் அலைச்சல் ஏற்படும் என கருதி, மீண்டும் நகரில் சாலையோரமே குடியிருந்து வருவதாக கூறப்படுகிறது. குடிசைமாற்று அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தெருவோர ஆக்கிரமிப்பில் உள்ளவர்களுக்கு நகரில் குடியிருக்கும் போது அன்றாடம் வருமானத்திற்கு தேவையான வேலை கிடைத்துவிடுகிறது. இவர்கள் நிரந்தரமாக குடியிருக்க வேண்டும் என்பதற்காக ராஜாக்கூரில் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வீட்டினை பெற்றுக்கொண்டு அங்கு செல்ல மறுத்துவிட்டனர். அவர்கள் மீண்டும் நகரில் ஆக்கிரமிப்பில் வாழ்ந்து வருகின்றனர். மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.