மதுரை, டிச. 30: விபத்து ஏற்படுத்தியதாக அரசு பஸ் டிரைவரின் லைசென்சை பறிமுதல் செய்தது விதிமீறல் என கூறியுள்ள ஐகோர்ட் கிளை உடனடியாக திரும்ப வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பெருமாள், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நான் ஓட்டி சென்ற பேருந்து விபத்தானதால், விதிமுறைகளை பின்பற்றாமல், எனது அசல் டிரைவிங் லைசென்சை செக்கானூரணி போலீசார் பறிமுதல் செய்து உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைத்து விட்டனர். எனவே, பறிமுதல் செய்யப்பட்ட டிரைவிங் லைசென்சை திருப்பித் தருமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இதேபோல் திருச்சியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சரண்ராஜ் என்பவரும் ஒரு மனு செய்திருந்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘மோட்டார் வாகனச் சட்டம்-1988ன் கீழ் ஓட்டுநர் உரிமம் வழங்கும் ஆர்டிஒ உரிய விதிமுறைகளை பின்பற்றி, விசாரணை நடத்தி விளக்கம் பெற்ற பிறகே ஓட்டுனரின், உரிமத்தை பறிமுதல் செய்ய வேண்டும். விபத்து நடந்த உடனேயே விசாரணையின் போதே ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்வது ஏற்புடையது அல்ல. இது விதிமீறலாகும். எனவே, மனுதாரர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட டிரைவிங் லைசென்சை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.
