கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுகாதாரத் துறை செயலாளரை சந்திக்க அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு முடிவு

சேலம் ஜூலை 24: தமிழகத்தில் அரசு மருத்துவர்களின் ேகாரிக்கை நிறைவேற, சுகாதாரத்துறை செயலாளரை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘‘அரசு மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த பதிவு உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கலந்தாய்வு மூலம் பணி ஆணை பிறப்பிக்க வேண்டும். நோயாளிகளுக்கு சமமாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும்,’’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள், கடந்த 10ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திலும், 12ம் தேதி தர்ணாவிலும் ஈடுபட்டனர். 15, 16ம் தேதிகளில் சென்னை மருத்துவகல்லூரியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும், 18ம் தேதி புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனால் தமிழக அரசு, மருத்துவர்களின் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை. ேகாரிக்கைகள் குறித்த அறிவிப்பும் சட்டமன்ற கூட்டத் தொடரில் வெளியாகவில்லை. இந்நிலையில் ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், அனைத்து அரசு டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு மருத்துவ அலுவலர் சங்கம் மற்றும் அரசு மருத்துவர்கள் நலச் சங்கம் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவர் சங்க கூட்டமைப்பு சார்பில் மாநில செயற்குழு கூட்டம் சென்னை ஸ்டான்லி மருத்தவமனையில் நடந்தது.  இது குறித்து சேலம் மாவட்ட அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், ‘‘அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. மேலும் அரசு மருத்துவர்கள் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷை இன்று(24ம் தேதி) சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதார துறை செயலாளரை சந்தித்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய அறிவிப்பு வெளியிடப்படும்,’’ என்றனர்.

Related Stories: