போர்வெல் அமைக்க ஜி.ஹெச் சுவரை இடிக்க அனுமதி மருத்துவரை கண்டித்து முற்றுகை அறந்தாங்கியில் பரபரப்பு

அறந்தாங்கி, ஜூலை 23: தனியார் கட்டிட உரிமையாளர் ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக, அறந்தாங்கி அரசு மருத்துவமனை சுற்றுச்சுவரை இடிக்க அனுமதி வழங்கிய, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையின் வடக்கு எல்லையை தாண்டி, தனியாருக்கு சொந்தமான வீடு மற்றும் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகம் மற்றும் வீடுகளின் தேவைக்காக, அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையின் வடக்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவரை உடைத்துவிட்டு, அந்த பகுதியில், ஆழ்துளை கிணறு தோண்டும் இயந்திரன் தாங்கு கம்பிகள் பொறுத்தப்பட்டு தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது.அரசு மருத்துவமனையின் சுவரை, தனியார் ஆழ்துளை கிணறு தோண்டுவதற்காக இடித்ததை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க, அரசு மருத்துவமனை சுற்றுச்சுவரை இடிக்க அனுமதி வழங்கிய அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று அறந்தாங்கி அரசு மருத்துவமனையை நேற்று முற்றுகையிட்டனர்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கர்ணா தலைமையில் நடந்த முற்றுகை போராட்டத்தில் மாவட்ட செயலாளர் நாராயணன், ஒன்றியத் தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனையை முற்றுகையிட வந்த வாலிபர் சங்கத்தினருடன் அறந்தாங்கி போலீஸ் டி.எஸ்.பி கோகிலா, இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: