கறம்பக்குடி வெட்டன்விடுதியில் நடந்த மாநில பெண்கள் கபடி போட்டியில் திண்டுக்கல் அணி முதலிடம்

கறம்பக்குடி, ஜூலை 23: கறம்பக்குடி அடுத்த வெட்டன்விடுதியில் நடந்த மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணி முதலிடம் பிடித்தது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வெட்டன் விடுதியில் தமிழ் நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம் மற்றும் வெட்டன் விடுதி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக தமிழ் நாடு மாநில அமெச்சூர் கபடி கழக அனுமதியுடன் மாநில அளவிலான பெண்கள் அமெச்சூர் கபடி போட்டி வெட்டன் விடுதி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் திண்டுக்கல், சென்னை, நாகை, திருவள்ளூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், வேலூர் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் அணியினர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக தலைவர் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்க துணை தலைவர் சோலை ராஜா தொடங்கி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் சென்னை- ஈரோடு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியை சோலை ராஜா தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட கல்வி அலுவலர் ராகவன் முன்னிலை வகித்தார்.உடற்கல்வி இயக்குநர்கள் சங்க பொது செயலாளர் செந்தில் குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். போட்டி முடிவில் திண்டுக்கல் மாவட்ட அணியினர் முதல் பரிசையும், ஈரோடு மாவட்ட அணியினர் இரண்டாவது பரிசையும், நாகை மாவட்டம் மயிலாடுதுறை சாய் அணியினர் மூன்றாவது பரிசையும், திருவள்ளூர் மாவட்ட அணியினர் நான்காவது பரிசையும் தட்டி சென்றனர். பரிசு பெற்ற அணியினருக்கு புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் ஜாபர் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் தொழில் அதிபர் பழனிவேல் மற்றும் மாரிமுத்து, கே.வி.எஸ்.பழனிவேல், பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேது மாதவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கறம்பக்குடி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தவபாஞ்சாலன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்க மாவட்ட செயலாளர் சின்ன துரை நன்றி கூறினார்.

Related Stories: