ராசிபுரம் நகராட்சியின் குப்பை கொட்டும் இடமாக மாறிய தட்டான்குட்டை ஏரி

ராசிபுரம்,  ஜூலை 18: ராசிபுரம் நகராட்சியில் நாள்தோறும் சேகரமாகும் குப்பை கழிவுகள்  மற்றும் கட்டிட கழிவுகளை தட்டான்குட்டை ஏரியில்  கொட்டுவதால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

ராசிபுரம் அருகிலுள்ள  சந்திரசேகரபுரம் ஊராட்சியில், சுமார் 44 ஏக்கர் பரப்பளவில் தட்டான்குட்டை  ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீராதாரத்தை அடிப்படையாக கொண்டு,  கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு களரம்பட்டி, பெரியூர், கரட்டுப்பட்டி,  அணைப்பாளையம், காட்டூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 500 ஏக்கர் விவசாய  நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. அதன் பின், போதிய மழையில்லாததால்  ஏரியில் தண்ணீர் தேங்கவில்லை. வரத்து வாய்க்கால்களும் தூர்ந்து போனதால்,  குறைந்த அளவு தண்ணீரே ஏரியில் தேங்குகிறது. தற்போது  ராசிபுரம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் வீடுகள், வர்த்தக கட்டிடங்களில்  நாள்தோறும் சேகரமாகும் குப்பை கழிவுகள், கட்டிட கழிவுகளை வாகனங்களில்  கொண்டு வந்து தட்டான்குட்டை ஏரியில் கொட்டுகின்றனர். இதுதவிர, சாக்கடை  கழிவுநீரும் ஏரியில் கலந்து வருகிறது. இதனால் ஏரியில் தண்ணீர் மாசடைவதுடன்,  கடும் துர்நாற்றம் வீசுகிறது. நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது. எனவே,  நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ஏரியில் கொட்டியுள்ள குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும். மேலும், சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுப்பதுடன், ஏரியை உடனடியாக தூர்வார  நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: