மானிய கோரிக்கையின்போது அறந்தாங்கி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தும் அறிவிப்பு இல்லை பொதுமக்கள் ஏமாற்றம்

அறந்தாங்கி, ஜூலை 18: அறந்தாங்கி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றும் அறிவிப்பு தமிழக அரசின் மானிய கோரிக்கையில் இடம்பெறாததால் அறந்தாங்கி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், அனைத்து வசதிகளுடன் கூடிய அந்தந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கும் மாவட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்போது வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்படுகிறது. இதனால் மாவட்ட தலைநகரில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை, அந்த மாவட்டத்தில் உள்ள 2-வது பெரியநகராகவும், நகராட்சியாகவும் உள்ள பகுதிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி தொடங்கும்போது, தஞ்சாவூரில் இயங்கிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கும்பகோணத்திற்கும், திருச்சியில் கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கியபோது, திருச்சியில் இயங்கிய மாவட்ட தலைமை மருத்துவமனை மணப்பாறைக்கும் மாற்றப்பட்டது. அதுவே விதியாகவும் உள்ளது.

அதேபோல புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கியபோது, புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக, மாவட்டத்தின் 2-வது பெரிய நகராகவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 வது நகராட்சியாகவும், போதுமான இடவசதியும், 7 வட்டங்களை சேர்ந்தவர்கள் பயன்பெறும் மருத்துவமனையாகவும் உள்ள அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்.

அறந்தாங்கி அரசு மருத்துவமனையை புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அறந்தாங்கியில் நடந்த நிகழ்ச்சியில் உறுதி அளித்தார். ஆனால் அவர் அறிவித்து பல ஆண்டுகளை கடந்த பின்பும், அறந்தாங்கி அரசு மருத்துவமனை இன்னும் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில் அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம், தேவகோட்டை, பேராவூரணி, கறம்பக்குடி வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகள், இந்த சட்டப்பேரவை கூட்ட தொடரிலாவது, அறந்தாங்கி அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் தினகரன் ஆதரவு நிலையில் இருந்து, சமீபத்தில் அதிமுக ஆதரவு நிலையை எடுத்த அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதியும், சட்டப்பேரவையில், அறந்தாங்கி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் பல்வேறு சமூக நல அமைப்புகளும், அறந்தாங்கி மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதிமுகவை சேர்ந்த பலரும், அறந்தாங்கி அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக மாற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அறிவிப்பு வெளியிடுவார் என சமூக ஊடங்களில் தொடர்ந்த பதிவிட்டு வந்தனர்.அறந்தாங்கி பகுதி அதிமுகவினரின் உறுதியான பதிவாலும், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி அதிமுக ஆதரவு நிலையை எடுத்ததாலும், இந்த கூட்டத்தொடரில் அறந்தாங்கி அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என முழு நம்பிக்கையோடு இருந்தனர். இந்நிலையில், மானியக் கோரிக்கையின்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், 110 விதியின் கீழ் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், அறந்தாங்கி அரசு மருத்துவமனையை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக மாற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அறந்தாங்கி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் எந்த அறிவிப்பும் வெளியாகாததால், 6 வட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், நோயாளிகள், சமூக ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து அறந்தாங்கி வர்த்தக சங்க நிர்வாகி செல்வம் கூறியது:புதுக்கோட்டையில் மருத்துவ கல்லூரி தொடங்கியதும், விதிப்படி அறந்தாங்கி அரசு மருத்துவமனை புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தபின்பும், அறந்தாங்கி மருத்துவமனை தரம் உயர்த்தப்படவில்லை. ஆனால் தரச்சான்று பெறுவதற்காக பல்வேறு பணிகள் மட்டும் அங்கு செய்யப்பட்டன.அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வரும் பல நோயாளிகள், மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை, தஞ்சாவூருக்கு அனுப்பப்படுகின்றனர். அவ்வாறு செல்லும்போது பலரும் உயிரிழக்கின்றனர். கடற்கரை, விவசாயிகள், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்;டியுள்ள அறந்தாங்கி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தினால், பல உயிர்களை காப்பாற்ற முடியும். விதிப்படி அறந்தாங்கி அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிப்பார் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தரம் உயர்த்துவது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களுக்கு அனைத்து வித நோய்களுக்கும் தரமான சிகிச்சை கிடைக்க அறந்தாங்கி அரசு மருத்துவமனையை புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக மாற்ற வேண்டும். இப்பகுதி நோயாளிகள், பொதுமக்களின் நலன் கருதி, இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே, அறந்தாங்கி அரசு மருத்துவமனையை புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தும் அறிவிப்பை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.புதுக்கோட்;டை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர், அறந்தாங்கி பகுதி மக்களின் அவசர அவசிய தேவையை உணர்ந்து, அறந்தாங்கி அரசு மருத்துவமனையை, புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக மாற்றும் அறிவிப்பை வெளியிடாததால், அப்பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே அமைச்சர் விஜயபாஸ்கர் உடனே அறந்தாங்கி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: