பூலாம்பட்டி காவிரி ஆற்றில் பெண்கள் உடை மாற்றும் அறை திறப்பு

இடைப்பாடி, ஜூலை 16: இடைப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரி ஆற்றில் பெண்கள் உடை மாற்றும் அறை திறப்பு விழா நேற்று நடந்தது.இடைப்பாடி அருகே பூலாம்பட்டி பேரூராட்சியில் உள்ள காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இதை கொண்டாட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி சிலைகள், பூஜை பொருட்கள், காவடி என குடும்பத்துடன் வந்து வழிபாடு நடத்துகின்றனர். மேலும், காவிரியில் குளித்து மகிழ்கின்றனர். இங்கு பெண்களுக்கான உடை மாற்றும் அறை இல்லை. எனவே, உடை மாற்றும் அறை மற்றும் காவிரியாற்றில் அதிக தூரம் செல்லாதவாறு கம்பி வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், சமூக ஆர்வலர்களான செவன்ஹில்ஸ் முருகன், சாய்கோ முரளி கிருஷ்ணன், ராஜா ஆகியோர் தங்களது சொந்த செலவில் உடைமாற்றும் அறை அமைத்து கொடுத்தனர். இதை தொடர்ந்து, நேற்று உடை மாற்றும் அறையை பேரூராட்சி அலுவலரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலா தலைமை வகித்து, அறையை திறந்து வைத்தார். முருகன், முரளிகிருஷ்ணன், ராஜா உழவர் மன்ற அமைப்பாளர் நடேசன், முன்னாள் கவுன்சிலர் கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து காவிரி கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

Related Stories: