குடும்ப கட்டுப்பாடு அவசியத்தை அனைவரும் உணர வேண்டும் விழிப்புணர்வு கருத்தரங்கில் அறிவுரை

தஞ்சை, ஜூலை 12: தஞ்சையில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. தஞ்சை திலகர் திடலிலிருந்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அண்ணாதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார். திலகர் திடலில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக தஞ்சை அரண்மனை வளாகம் சங்கீத மகாலில் பேரணி நிறைவு பெற்றது.பின்னர் சங்கீத மகாலில் நடந்த உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கில் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது கலெக்டர் அண்ணாதுரை பேசும்போது, இன்றைய உலக மக்கள் தொகை சுமார் 800 கோடியாகும். இந்திய நாட்டின் மக்கள் தொகை 135 கோடியாகும். இந்திய நாட்டின் மக்கள் தொகை உலக நாடுகளில் 18 சதவீதமாகும். மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் இடர்பாடு, உணவு பற்றாக்குறை, இட பற்றாக்குறை ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே உலக மக்கள்தொகை தின நிகழ்ச்சியின் நோக்கமாகும். குடும்ப கட்டுப்பாடு செய்வதன் அவசியம் குறித்து அனைவரும் உணர வேண்டும். மக்கள்தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகளை அறிந்து நாட்டின் வளர்ச்சிக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

இதைதொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், முன்னாள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் காந்தி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துணை இயக்குனர் காந்தி (பொ), மருத்துவம் மற்றும் குடும்பநல துணை இயக்குனர் மலர்விழி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரவீந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: