தமிழகத்தில் கள்ளக்காதலால் அதிகரிக்கும் குழந்தைகள் பலி எண்ணிக்கை பண்பாட்டை தொலைத்து பாதை மாறி போகிறதா சமூகம்?

வேலூர், ஜூலை 14: தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கள்ளக்காதல் என்ற சீர்கேட்டால் செத்து மடியும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களை வேதனையடைய செய்துள்ளது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கள்ளக்காதலால் அதிகரிக்கும் கொலைகள் தொடர்பாக தனது அழுத்தமான வேதனையை பதிவு செய்திருந்தது. இது சமுதாயம் எந்த பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது? என்ற கேள்வியை உயர்த்தி பிடித்துள்ளது. இதற்கான விடையை தேட வேண்டிய காலக்கட்டாயத்தில் தமிழ் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. உலகத்தில் நீதிநெறியை வலுவாக போதித்த சமூகங்களுள், தமிழ் சமூகத்துக்கே முக்கிய பங்குண்டு. அகநானூறு, புறநானூறு என்று அகவாழ்க்கையையும், புறவாழ்க்கையையும் பிரித்து தமிழனை நெறிப்படுத்தினர் நமது முன்னோர்கள். திருக்குறள், நாலடியார், நான்மணி கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி என்று பதினெண் கீழ்கணக்கில் உள்ள 18 நூல்களில் 11 நூல்கள் நீதிநெறி நூல்கள்.

இதுபோக இடைக்காலத்தில் அருங்கலச் செப்பு, அறநெறிச்சாரம், நறுந்தொகை, நீதிநெறிவிளக்கம், நன்னெறி, உலகநீதி, முதுமொழி வெண்பா நூல்களும், அவ்வையாரின் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நூல்களும் என தமிழனை ஒவ்வொரு காலத்திலும் பண்படுத்தி நெறிப்படுத்திய நூல்கள் ஏராளம். இத்தகைய சிறப்பு வேறு மொழியை சேர்ந்தவர்களுக்கு கிடைத்திருக்குமா? என்பது கேள்விக்குறிதான். அதோடு ஆன்மீக, பண்பாட்டு நெறியிலும் நமது மக்களை பண்படுத்தி வைத்திருந்தனர் நமது முன்னோர்கள். இதனால் கூட்டுக்குடும்ப நெறிமுறை வலுவுடன் திகழ்ந்து அதனால் ஒழுக்கநெறிகளும் அன்பு என்ற ஒற்றை சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன. அதுவரை பிரச்னையின்றி கற்பு நெறியும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டு சாரமும் இம்மியளவும் பிசகாமல் இருந்து வந்தது. ஆனால், உள்ளங்கையில் உலகப்பந்து உருள ஆரம்பித்ததும், கலாச்சார தொடர்புகளின் தாக்கமும், தகவல் தொடர்பு சாதனங்களின் ஆதிக்கமும் தமிழகத்தில் அழுந்த பதிந்தது. அதோடு உலகமயம், தாராளமயம், பொருளாதாய சிந்தனை ஆகியன கூட்டுக்குடும்ப முறைக்கு வேட்டு வைத்தது.

அதனால் தனிக்குடித்தனங்கள் பெருக, உறவுகளின் புனிதமும் கேள்விக்குறியாக்கப்பட்டது. கற்புநெறியும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடுகளும் கட்டுகளை அவிழ்க்க ஆணும், பெண்ணும் இருவேறு திசைகளில் பயணிக்க தொடங்கினர். காலத்தின் போக்கு கலாச்சாரத்தை தள்ளாட வைத்த நிலையில் அதன் விளைவுகள்தான் இன்று கள்ளக்காதல் என்ற சொல்லாட்சி வலுவோடு எழுந்து தமிழ் நிலத்தை தலை குனிய வைத்துள்ளது. அதன் எதிரொலிதான் சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்றம் கள்ளக்காதலால் பலியாகும் உயிர்கள் குறித்த தனது அழுத்தமான வேதனையை பதிவு செய்தது.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் கள்ளக்காதலால் கொல்லப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை 1,300 என்றால், அதில் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 300ஐ தாண்டுவதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளி விவரம். இந்த எண்ணிக்கை பிறந்தவுடனே கால்வாயிலும், குப்பைமேட்டிலும் வீசப்பட்டு மடிந்த குழந்தைகள் தொடங்கி பள்ளிக்குழந்தைகள் வரை முறைகேடான கள்ளத்தொடர்பால் கொல்லப்பட்டவை. இதில் ஈன்றெடுத்த தாயாலேயே கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமானது. வேலூர் மாவட்டத்தில் கால்வாயிலும், குப்பை மேட்டிலும் வீசப்பட்ட சிசுக்களின் எண்ணிக்கை 50ஐ தொடுகிறது. இதில் உயிருடன் காப்பாற்றப்பட்டவை 15 சிசுக்கள் என்கிறது மருத்துவமனைகள் தொடர்பான அறிக்கை.

இவ்வாறு தங்களின் உடல் இச்சையை மட்டுமே பிரதானமாக கொண்டு பெற்றெடுத்த குழந்தைகளை கொல்லும் பெண்களின் செய்கைதான், தகவல் தொடர்பு சாதனங்களின் ஊடுருவலும், அன்னிய கலாச்சாரத்தின் தாக்கமும் சமூகத்தில் எத்தகைய சீரழிவை கொண்டு வந்து விட்டுள்ளது என்பதை விளக்குகிறது.

இதுதொடர்பாக மனநல மருத்துவர்களிடம் கேட்டபோது, ‘உடல் இச்சை என்பதும் இயற்கையின் ஒரு சாதாரண வெளிப்பாடுதான். அதனை பூர்த்தி செய்வதற்காக தடம் மாறும்போதுதான் நீங்கள் கூறும் கொலை சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இது ஒரு கலாச்சார தடுமாற்றம்தான். வெளிநாடுகளில் கள்ளக்காதல் என்ற சொல்லே இல்லை. காரணம், அங்கு குடும்ப வாழ்வியல் முறை என்பது இல்லை. விருப்பமானவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். வெறுப்பு தட்டும்போது விலகிக் கொள்ளலாம். அந்த தாராள உணர்வு இங்கு இல்லை. ஆனாலும், இச்சையின் காரணமாக எல்லை மீறலாம் என்ற ஆர்வம் மட்டும் உள்ளது. இதுதான் இப்பிரச்னைகளுக்கு காரணமே. அதோடு கடந்த 30 ஆண்டுகளில் நமது கல்விமுறையில் ஏற்பட்ட மாற்றங்ளையும் இதற்கு காரணமாக கூறலாம்.

இதற்கு அரசும், கல்வியாளர்களும், ஆன்மீக பெரியவர்களும் இணைந்துதான் தீர்வு காண வேண்டும். மேலும் திருமணத்துக்கு முன்பே வாழ்க்கையில் இணையும் இரண்டு பேரின் மருத்துவரீதியிலான உடல் திறன் சோதனையும், கலந்துரையாடலும் அவசியம். ேஜாதிடத்தால் பொருத்தம் காண்பது எல்லாம் தவறு என்றுதான் சொல்ல முடியும்’ என்றனர். எனவே, தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ள இத்தகைய சமூக சீரழிவை தடுப்பதற்கான தார்மீக ரீதியிலான நடவடிக்கையை எடுத்து நமது மண்ணின் மாண்பை காப்பாற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: