திருச்சினம்பூண்டியில் மணல் குவாரி அமைக்க முயன்றால் உயிரை கொடுத்தாவது தடுப்போம்

திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 27: திருச்சினம்பூண்டியில் மணல் குவாரி அமைக்க முயன்றால் உயிரை கொடுத்தாவது தடுப்போம் என்று பேச்சுவார்த்தை கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்தனர்.திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சினம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு பொக்லைன் வைத்து பாதை அமைக்கும் பணியை துவங்கியது. இதை அப்பகுதி மக்கள், சுற்றுவட்டார கிராம மக்கள், விவசாயிகளும் இணைந்து மணல் குவாரி அமைக்கக்கூடாது என்று கடந்த 20ம் தேதி கொள்ளிடம் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதைதொடர்ந்து பூதலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் பொதுமக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. தஞ்சை குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் ரவிச்சந்திரன், ஜூவாலஜி பேராசிரியர் ராமஜெயம், தஞ்சை உதவி செயற்பொறியாளர் கல்யாணசுந்தரம், உதவி பொறியாளர்கள் ராஜா, அன்புச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி உட்பட பலதுறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், விவசாயிகள் கூறுகையில், நாளை (28ம் தேதி) நடக்கவுள்ள கிராமசபை கூட்டத்தில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற இருக்கிறோம். நீதிமன்றத்தை நாடி தடையாணை பெறவுள்ளோம். மணல் குவாரி அமைத்தால் கொள்ளிடம் ஆற்றில் தற்போது இயங்கி வரும் அரசு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படாத நிலை ஏற்படும். இப்பகுதி நிலத்தடி நீர் மேலும் அதளபாதாளத்துக்கு சென்றுவிடும். இப்பகுதியில் சுக்காம்பார், கோவிலடி, திருச்சினம்பூண்டி, பூண்டி, வானராங்குடி, மருவூர் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ள கூகூர், அன்பில், அரியூர், நத்தம், செங்கரையூர், திருமானூர் என அனைத்து பகுதிகளிலும் மணல் குவாரி அமைத்தால் கடந்தாண்டு காவிரியில் வந்த கூடுதல் தண்ணீரால் முக்கொம்பு அணை மற்றும் திருவானைக்கோவில் பாலம் உடைந்ததுபோல் கல்லணை அணை, செங்கரையூர் பாலம், திருமானூர் பாலம் உடைந்து அபாயம் உள்ளது. இப்பகுதியில் 3 போகம் சாகுபடி செய்ததுபோய் தற்போது ஒரு போகத்துக்கு வந்துவிட்ட நிலையில் மேலும் மணல் குவாரி அமைத்தால் சோலைவனமாக இருந்த எங்கள் பகுதி பாலைவனமாக மாறிவிடும். இப்பகுதியில் தண்ணீர் பிடித்து வைத்த சில மணி நேரத்தில் மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது. முதலில் எங்களுக்கு நல்ல தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யுங்கள்.

தற்போது தமிழகம் எங்கும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளீர்கள், எக்காரணம் கொண்டும் மணல் குவாரி அமைக்க முயற்சித்தால் போராட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி போல உயிரை கொடுத்து தடுப்போம். மணல் குவாரி அமைத்தால் லாரிகள் முன்பாக படுத்து உயிரை விடுவோம் என்றனர்.தாசில்தார் சிவக்குமார் பேசுகையில், நீங்கள் தெரிவித்துள்ள கருத்துகளை மேல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவோம். அதுவரை மணல் குவாரி வேலைகள் நிறுத்தி வைக்கப்படும். சட்டவிரோதமாக தற்போது சிலர் மணலை கொள்ளையடிக்கின்றனர். அதையும் நீங்கள் தடுக்க வேண்டும். அதுகுறித்து நீங்கள் தனியாகவோ, குழுவாகவோ சேர்ந்து எங்களுக்கு தெரியப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்.கூட்டத்தில் வக்கீல்கள் ஜீவக்குமார், மதியழகன், கம்யூனிஸ்ட் காந்தி, பவனமங்கலம் பொன்னுராமன், பூண்டி திருநாவுக்கரசு, கோவிந்தராஜ், திருச்சினம்பூண்டி தென்னரசு, வடிவழகன், ரங்கராஜ், விஜயா, கலைச்செல்வி, அம்பிகா, அரியூர் திருநாவுக்கரசு மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related Stories: