கஜா புயலின்போது விழுந்த மரங்களை ஈடு செய்ய காரைக்காலில் 36 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு

காரைக்கால், ஜூன் 25: காரைக்காலில் கடந்த கஜா புயலின் போது ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்தது. இந்த மரங்களை ஈடு செய்யவும், புவி வெப்பமயமாவதை தடுக்கும் வகையிலும், மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் இதற்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு கலெக்டர் விக்ராந்த்ராஜா தலைமை வகித்தார். துணை கலெக்டர் ஆதர்ஷ், நகராட்சி ஆணையர் சுபாஷ் மற்றும் பொதுப்பணித் துறை மின்துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் விக்ராந்த்ராஜா பேசியதாவது:புயலின்போது காரைக்காலில் விழுந்த ஆயிரக்கணக்கான மரங்களை ஈடுகட்ட காரைக்கால் மாவட்டம் முழுவதும் சுமார் 36 ஆயிரம் மரக்கன்றுகள் நட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு வணிகர்கள் மற்றும் அரசு துறையினர், பள்ளி கல்லூரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

குறிப்பாக பெட்ரோல் பங்குகள், ஐஸ் தொழிற்சாலைகள், தொழிற்சாலைகள், நட்சத்திர அந்தஸ்து பெற்ற உணவகங்கள் தலா 100 மரக்கன்றுகளும், சிறு தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், இருசக்கர வாகன டீலர்கள் தலா 50 மரக்கன்றுகளும், உணவகங்கள் தலா 25 மரக்கன்றுகளும், பெருவணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், குடியிருப்பு வளாகங்கள் தலா 10 மரக்கன்றுகளும் என சுமார் 36 ஆயிரம் மரக்கன்றுகள் முதல்கட்டமாக நட்டு பராமரித்து பாதுகாத்து விட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களும் தங்களால் இயன்ற வகையில், மரக்கன்றுகளை நட்டு புவி வெப்பமயமாவதை குறைப்பதற்கு தங்கள் பங்களிப்பை அளிக்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. நடுகின்ற மரங்கள் நன்றாக வளர்வதை கருத்தில் கொண்டு மரங்களை மழைக்காலத்தில் நடுவதற்கும் நட்டு பராமரிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக வேளாண் கல்லூரி முதல்வர், கூடுதல் வேளாண் இயக்குனர் மற்றும் நகராட்சி ஆணையர் ஒருங்கிணைந்து, தகுந்த பருவ நிலையை அனைவருக்கும் அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: