ரயிலடி தெருவில் சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகள்

ஆத்தூர், ஜூன் 19: ஆத்தூர் ரயிலடி தெருவில் கடைக்காரர்கள் சாலை ஆக்கிரமித்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஆத்தூர் நகரின் பிரதான போக்குவரத்து பகுதியாக திகழ்வது ரயிலடி தெருவாகும். இந்த சாலை வழியாக தான் ரயில் நிலையம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள், வணிகவரித்துறை, தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால், இப்பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் காணப்படும். இந்த நிலையில், தெருவில் உள்ள கடைக்காரர்கள், சாலையை ஆக்கிரமித்து கடையை நீட்டிப்பு செய்துள்ளனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, காலை, மாலை நேரத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், போக்குவரத்து போலீசாரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், சாலையை கடக்க முடியாமல் பொதுமக்களும், பள்ளி மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘தற்போது போதிய போலீசார் இல்லாததால் பீக் ஹவர்ஸ் நேரத்தில், ஆத்தூர் ரயிலடி தெருவில் போலீசார் ரோந்து செல்ல முடியவில்லை. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விரைவில் நகராட்சி அதிகாரிகளில் ஒத்துழைப்போடு, சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

Advertising
Advertising

Related Stories: