ஜமாபந்திக்கு வரும் மக்களிடம் பணம் பறிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை

திட்டக்குடி, ஜூன் 19: கடலூர் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் ஜமாபந்தி நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் பொதுமக்கள் தங்களது பிரச்னை, கோரிக்கைகளை மனுவாக அதிகாரிகளிடம் வழங்கி தீர்வு காண்கின்றனர். இந்நிலையில் பல கிராமங்களிலிருந்து வரும் மக்களிடம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற உதவுவதாகவும், இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று வசூலில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன பகுதி சிறுகுறு விவசாயிகள் நல சங்க தலைவர் தயாபேரின்பம் மற்றும் நிர்வாகிகள், ஜமாபந்தி அலுவலரிடம் மனு அளித்தனர். அதில், அரசு அதிகாரிகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஜமாபந்தியில் மனு கொடுக்க வரும் விவசாயிகள், பெண்கள் மற்றும் முதியோரிடம் மனுக்களை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு பணம் தரவேண்டும் என கூறி புரோக்கர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் மீது விசாரணை செய்து கைது செய்ய வேண்டும். தாலுகா அலுவலகத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று முறையிட்டனர். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Related Stories: