நூறு நாள் வேலை வழங்க வேண்டும் கிராம நலச்சங்கம் வேண்டுகோள்

சிவகங்கை, ஜூன் 18: காளையார்கோவில் அருகே துவரிப்பட்டி, சிறுசெங்குளிப்பட்டி கிராமங்களுக்கு நூறு நாள் வேலை வழங்கக்கோரி கலெக்டர் ஜெயகாந்தனிடம் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கிராம நலச்சங்கம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: காளையார்கோவில் தாலுகா முத்தூர் வாணியங்குடி ஊராட்சிக்குட்பட்டது துவரிப்பட்டி, சிறுசெங்குளிப்பட்டி கிராமங்கள். இங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில்(நூறு நாள் வேலை திட்டம்) கடந்த ஆறு மாதமாக பணிகள் வழங்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் பாதிப்படைகின்றனர்.

இதுகுறித்து களையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் இரண்டு கிராமங்களும் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த இரண்டு கிராமங்கள் வழியே தார்ச்சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கியும் சாலை போடாமல் காலம் கடத்தப்படுகிறது. இந்த இரண்டு கிராமங்களிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, நூறு நாள் வேலை வழங்கவும், தார்ச்சாலை விரைந்து அமைக்கவும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இரண்டு கிராமங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: