தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளையை கண்டித்து மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஜூன் 14: தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளையை கண்டித்து மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பிரசாந்த் தலைமையில் மாவட்ட தலைவர் மாடசாமி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாக வசூலிக்கின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு ரசீது வழங்கப்படுவதில்லை. அரசு பள்ளிகள் உரிய அடிப்படை வசதிகள் இன்றி செயல்படுகின்றன. அரசு பள்ளிகள் கல்வி உதவித்தொகை, பாடப்புத்தகம், நோட்டுகள், பஸ் பாஸ் வழங்குவதை ஆண்டு துவக்கத்தில் உறுதிப்படுத்த வேண்டும்.

தனியார் பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தை வெளியிட்டு, அதன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க உத்தரவிட வேண்டும் என கோஷம் எழுப்பினர்.  அதை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதனிடம் மனு அளித்து கலைந்து சென்றனர்.

Related Stories: