சேலத்தில் பணம் பறிப்பதற்காக தொழிலதிபரை காரில் கடத்த முயன்ற 2 பேர் அதிரடி கைது

சேலம், ஜூன் 14: சேலத்தில் பணம் பறிப்பதற்காக ஜவுளிக்கடை அதிபரை காரில் கடத்த முயன்ற வழக்கில், 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தொடர்ந்து தேடி வருகின்றனர். சேலம் அழகாபுரம் ரெட்டியூரை சேர்ந்தவர் காளீஸ்வரன் (46). 5 ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 9ம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றார். பின்னர், ராமகிருஷ்ணா சாலையில் உள்ள ஒரு ஏடிஎம்மில் ₹1 லட்சம் பணம் போடுவதற்காக தனது பைக்கில் வந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு ஆம்னி கார், பைக் மீது மோதியது.

Advertising
Advertising

இதில் நிலை தடுமாறிய காளீஸ்வரன், சாலையில் விழுந்தார். உடனே, காரில் இருந்து இறங்கிய 6 பேர் கும்பல் காளீஸ்வரனை சரமாரியாக தாக்கி, காரில் ஏற்றி கடத்த முயன்றனர். அந்த 6 பேரில் பிடியில் இருந்து தப்பிக்க முயன்று, காளீஸ்வரன் கூச்சலிட்டார். அப்போது, அவரது இடது கையில் கத்தியால் குத்தினர். ஆனாலும் அவரை காருக்குள் இழுத்து போடமுடியவில்லை. அவரது சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த சிலர் ஓடி வந்தனர்.

உடனே கடத்தல் ஆசாமிகள், காளீஸ்வரனை விட்டுவிட்டு, காரில் தப்பினர். கத்திக்குத்தில் காயம் அடைந்த காளீஸ்வரன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் (பொ) சாலைராம்சக்திவேல் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். அதில், சம்பவம் நடந்த இடம் அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், கடத்தல்காரர்கள் சிலரின் உருவம் பதிவாகியிருந்தது. அதனை கொண்டு தீவிர விசாரணையில் இறங்கினர்.

இந்நிலையில் நேற்று, இக்கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட அஸ்தம்பட்டியை சேர்ந்த சந்தோஷ் (26), சின்னதிருப்பதியை சேர்ந்த காசிவிஸ்வநாதன் (24) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில், ஜவுளிக்கடை அதிபர் காளீஸ்வரை கடத்தி, லட்சக்கணக்கில் பணம் பறிக்கலாம் என திட்டமிட்டு கடத்த முயன்றதாக வாக்குமூலம் கொடுத்தனர். இதையடுத்து கைதான இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Related Stories: