சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

சோழவந்தான், ஜூன் 12: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரேட்டம் ஜூன் 25ல் நடக்கிறது. சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் 17 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக பூஜை பொருட்களுடன் நான்கு ரதவீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின்னர் பக்தர்களின் பக்தி கோஷத்துடன் இரவு 8.30 மணியளவில் கோயில் உள் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது, பின்னர் பூக்குழி, அக்னிசட்டி, பால்குடம் எடுக்கும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 18ம் தேதி பால்குடம், அக்னி சட்டியும், 19ம் தேதி பூக்குழியும், 25ம் தேதி தேரோட்டமும், 26ம் தேதி வைகையாற்றில் தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது. விழா நாட்களில் ரிஷபம், காமதேனு, அன்னம், யாழி, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் உலாவும், மண்டகப்படிதாரர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை தக்கார் மாரியப்பன், செயல்அலுவலர் சுசிலாராணி, கணக்கர் பூபதி, சண்முகவேல் குருக்கள், பணியாளர்கள் வசந்த், முருகன், மருதுபாண்டி, சுபாஷினி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Related Stories: