திறந்தவெளி கழிப்பிடங்களை தவிர்க்க வலியுறுத்தி மகளிர் குழுவினர் விழிப்புணர்வு பேரணி

கோவில்பட்டி, ஜூன் 12: கோவில்பட்டி அருகே குலசேகரபுரத்தில் திறந்தவெளி கழிப்பிடங்களை தவிர்க்க வலியுறுத்தி மகளிர் சுயஉதவி குழு உறுபினர்கள் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.  தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை, மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில் சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ஜெயந்தி அறிவுரைப்படி கோவில்பட்டி அருகே குலசேகரபுரத்தில் திறந்தவெளி கழிப்பிடங்களை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் தலைமை வகித்தார். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜலட்சுமி, ரோட்டரி சங்க செயலாளர் ரவிமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குலசேகரபுரம் ஊராட்சி செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். ரோட்டரி சங்க தலைவர் பாபு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியின்போது குலசேகரபுரம், லிங்கம்பட்டி ஊராட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தமாட்டோம், திறந்தவெளி கழிப்பிடங்களை தவிர்த்து கழிப்பறையை பயன்படுத்தி முழு சுகாதாரமான கிராமமாக உருவாக்கிட உறுதிமொழி எடுத்து கொண்டு, விழிப்புணர்வு பதாதைகளை கைகளில் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். மேலும் கிராம மக்களிடம் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துமுருகன், பணித்தள பொறுப்பாளர்கள் லதா, ஜெயகிருஷ்ணவேணி, மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். லிங்கம்பட்டி ஊராட்சி செயலாளர் போஸ் நன்றி கூறினார்.

Related Stories: