காஷ்மீரில் ஆற்றில் விழுந்து மாயமான ராணுவ வீரரை மீட்டுக் கொடுங்கள் கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர் மனு

வேலூர், ஜூன் 12: காஷ்மீரில் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆற்றில் தவறி விழுந்து மாயமான தங்கள் மகனை மீட்டுத்தரக்கோரி ராணுவ வீரரின் பெற்றோர் நேற்று கலெக்டர் ராமனிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என் பெயர் மனோன்மணி. எனது கணவர் பெயர் சேட்டு, கூலித்தொழிலாளி. நாங்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா காக்கங்கரை அஞ்சல்மாரி வட்டம் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களது மகன் சபரிநாதன்(25). இந்திய ராணுவத்தில் காஷ்மீர் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி பகல் 11 மணியளவில் எனது செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது.

அதில் பேசியவர்கள் இந்திய ராணுவத்தில் இருந்து பேசுவதாகவும், சபரிநாதன் உட்பட 10 பேர் கொண்ட ராணுவ வீரர்கள் ஆற்றின் அருகே உள்ள மரப்பாலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென்று மரப்பாலம் உடைந்தது. அதில் 10 ராணுவ வீரர்களும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் சபரிநாதன் உட்பட 3 பேர் மாயமாகிவிட்டதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் தொடர்பு கொண்டு தொடர்ந்து தேடுதல் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தனர். அதன்பிறகு சபரிநாதன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, காஷ்மீரில் மாயமான எங்களது மகனை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராமன் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்

Related Stories: