பரமத்திவேலூர் அருகே தேர்திருவிழாவின் போது குடிநீர் விநியோகம் ரத்து

பரமத்திவேலூர்,  ஜூன் 11: பரமத்திவேலூர் அருகே, தேர்திருவிழாவின் போது, குடிநீர் விநியோகம் செய்யாததால் 2 நாளாக கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பரமத்திவேலூர் அடுத்துள்ள காளிபாளையம் கிராமத்தில், சுமார்  200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில்  தற்போது செல்லியம்மன் கோயில் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.  விழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரை சின்னகரசப்பாளையம், பெரியகரசப்பாளையம், கே.ராசாம்பாளையம், காளிபாளையம் என நாள்தோறும் ஒரு  கிராமத்திற்கு இழுத்துச்சென்று, அங்குள்ள பொதுமக்கள் வழிபடுவது வழக்கம்.   நேற்று முன்தினம், காளிபாளையம் கிராமத்திற்கு தேர் வந்தது. இந்நிலையில், காளிபாளையம்  பகுதியில் பஞ்சாயத்து சார்பில் 2 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.

தேர்த்திருவிழா நடைபெறும் நேரத்தில்  தண்ணீர் வழங்காததால், மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.  இது குறித்து, டேங்க் ஆப்ரேட்டர் நடராஜன் மற்றும் வட்டார  வளர்ச்சி அலுவலரிடம், கிராம மக்கள் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.  இதனிடையே, காழ்ப்புணர்ச்சி காரணமாக, திருவிழா நடக்கும் சமயத்தில் 2 நாட்களாக குடிநீர் விநியோகிக்காமல் மெத்தனமாக இருப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: